மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரத்தில் வேலைநிறுத்தம்

பிரசுரிக்கப்பட்டது

இலங்கைச் சிறைகளில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுதலைசெய்ய வேண்டுமெனக் கோரி, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

தங்கச்சி மடத்தில் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்.
படக்குறிப்பு, தங்கச்சி மடத்தில் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்.

எல்லை தாண்டிவந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் உள்ளனர்.

தற்போது இலங்கைச் சிறைகளில் தமிழக மீனவர்கள் 87 பேர் இருக்கின்றனர். 39 விசைப் படகுகள் இலங்கை வசம் இருக்கின்றன என ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை வசம் இருக்கும் மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வேண்டுமெனக் கோரி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர்.

அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றையும் இன்று தங்கச்சி மடத்தில் அவர்கள் நடத்தினர்.

இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய தமிழ்நாடு விசைப்படகு மீனவர் சங்க மாவட்டத் தலைவர் ஜேசு ராஜா, வரும் 28ஆம் தேதி தலைமன்னார் நீதிமன்றத்தில் மீனவர்கள் தொடர்பான வழக்கு வரவிருப்பதாகவும் அதில் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்புவதாகவும் இல்லாவிட்டால் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தப்போவதாகவும் தெரிவித்தார்.

இலங்கை கடற்படை தொடர்பான சம்பவங்களில் கடலில் மூழ்கிய 18 படகுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் அவர் கோரினார்.

ராமநாதபுரத்தில் சுமார் 800 விசைப்படகுகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றன. அம்மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் மீன்பிடித் தொழிலைச் சார்ந்திருக்கின்றனர்.