உபி பெண்கள் கொலை: சிபிஐ அறிக்கையை நீதிமன்றம் நிராகரிப்பு

பட மூலாதாரம், AFP
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு மரத்தில் தொங்கிய நிலையில் இறந்து காணப்பட்ட இரு இளம் பெண்கள், பலரால் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கொல்லப்படவில்லை, அவர்கள் தற்கொலை செய்துகொண்டனர் என்று இந்திய மத்திய புலனாய்வு நிறுவனம், சிபிஐ, அளித்த அறிக்கையை , வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த இரு பெண்களில் ஒருவர், மற்றொரு பையனுடன் காணப்பட்ட நிலையில், அது தொடர்பான "அவமானத்தை" தாங்கமுடியாமல்தான் இருவரும் மரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிபிஐ அறிக்கை கூறியது.
கடந்த ஆண்டு மே மாதம் 28ம் தேதி, உத்தரப்பிரதேசத்தின் பதுவான் கிராமத்தில் இந்த இரு இளம் சகோதரிகளும் ஒரு மாமரத்திலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர்.
ஆனால் இந்த வழக்கின் போக்கை சிபிஐ திசை திருப்புவதாக இந்த இளம் பெண்களின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதே விவகாரத்தில் பல கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை என்றும் இந்த குடும்பத்தினரின் உறவினர்கள் கூறுகிறார்கள்.
அப்போது இந்த பெண்கள் பலரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சர்ச்சை எழுப்பப்பட்டு அது உலக கவனத்தை ஈர்த்தது. உள்ளூரில் நடத்தப்பட்ட முதல் மருத்துவ பரிசோதனையின் முடிவுகளும், இவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், தூக்கிலிட்டு இறந்துள்ளனர் என்றும் கூறியது.
பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் போது சிபிஐயின் விசாரணை முடிவுகள் வெளியாகிய போது, மரணமுற்ற 15 வயது பெண் ஒரு ஆணுடன் நெருக்கமான உறவு வைத்திருந்ததாகவும், மற்றொரு பெண் அவர்களது உறவுக்கு வழிவகுத்து உதவியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையின் முடிவு, 40 அறிவியல் அறிக்கைகள் மற்றும் 200 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட பின் தான் எடுக்கப்பட்டது என்றும் அது கூறியது.
இந்த பெண்களின் தவறுகள் அம்பலமாகிய காரணத்தால் தான் அவர்கள் அத்தகைய முடிவுக்கு தள்ளப்பட்டார்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. மேலும் இவர்களின் பெற்றோர்கள் பொய்யான பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கை பதிவு செய்துள்ளதாகவும், அந்த வழக்கை முடித்துக்கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.
இதை எதிர்த்து அந்த இளம் பெண்களின் பெற்றோர்கள் உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். தொடர்ந்து நடைபெற்ற இந்த வழக்கில் இந்த உத்தரவு தற்போது வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் மற்றும் கடமையை செய்யத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்ட இரு போலிஸ்காரர்கள் ஆகியோர் கடந்த செப்டம்பரில் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
































