புதுவை துணை நிலை ஆளுநராக கிரண் பேடி நியமனம்
புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், KIRAN BEDI
இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று அதற்கான நியமன ஒப்புதலை வழங்கியுள்ளார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற டில்லி சட்டமன்றத்திற்கான தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்ட கிரண் பேடி தோல்வியடைந்தார்.
தொடர்ந்து தீவிர அரசியலில் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்த கிரண் பேடி, தற்போது புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுவையில் காங்கிரஸ் கட்சி புதிய ஆட்சியை அமைக்கவுள்ள சூழலில் இந்த நியமனம் நடைபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக பொறுப்பு வகித்து வந்த விரேந்திர கட்டாரியா பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, அந்தமான் நிகோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அஜய் குமார் சிங் புதுச்சேரிக்கும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் அண்ணா ஹசாரே மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோருடன் இணைந்து அரசியலில் ஈடுபட துவங்கி, பாரதிய ஜனதா கட்சியின் டில்லி முதல்வர் வேட்பாளராக உருமாறிய கிரண் பேடி, புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகியுள்ளார்.




























