பிரிட்டிஷ் பிரஜை கொலை வழக்கு சந்தேகநபர் தலைமறைவு?

பிரசுரிக்கப்பட்டது
இவ்வாறான வழக்குகள் மூலம் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை சர்வதேசத்தால் கவிழ்க்க முடியாது என்று பிரதான சந்தேகநபர் முன்னர் கூறியிருந்தார்
படக்குறிப்பு, இவ்வாறான வழக்குகள் மூலம் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை சர்வதேசத்தால் கவிழ்க்க முடியாது என்று பிரதான சந்தேகநபர் முன்னர் கூறியிருந்தார்

இலங்கையின் தெற்கே, தங்காலை பிரதேசத்தின் களியாட்ட விடுதியொன்றில் 2011-ம் ஆண்டு நத்தார் பிறப்புக் கொண்டாட்ட நிகழ்வின்போது பிரிட்டிஷ் பிரஜை குராம் ஷேய்க் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபரைக் கைதுசெய்யுமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இன்று சனிக்கிழமையுடன் மூன்று நாட்களாகின்றன.

ஆனால், அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்த தகவல் இன்னும் தெரியவில்லை என்று இலங்கை காவல்துறை கூறுகிறது.

அவரைத் தேடி சிறப்பு பொலிஸ் குழுவொன்று தெற்கு பிராந்தியத்துக்குச் சென்றுள்ளதாக காவல்துறை பேச்சாளர் எஸ்எஸ்பி அஜித் ரோஹண தெரிவித்தார்.

தற்போது பிணை அனுமதியில் உள்ள தங்காலை பிரதேசசபைத் தலைவர் சம்பத் விதான பத்திரண கடந்த வியாழனன்று கொழும்பு மேல்நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.

அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் கூறியபோதிலும், அதற்கான ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தால் சந்தேகநபரை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

சந்தேகநபரான தங்காலை பிரதேசசபைத் தலைவர் நாட்டைவிட்டோ அல்லது அந்தப் பிரதேசத்திலிருந்தோ தப்பிச்சென்றுவிட்டதாக பொலிசாரிடம் தகவல் உள்ளதா என்று தமிழோசை காவல்துறை பேச்சாளரிடம் வினவியது.

'தங்காலை பிரதேசத்தில் இல்லை'

குராம் ஷேய்க் கொலைவழக்கு தொடர்பில் சிறப்பு வழக்குரைஞரை நியமித்து விசாரணையை துரிதப்படுத்துவதாக அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது
படக்குறிப்பு, குராம் ஷேய்க் கொலைவழக்கு தொடர்பில் சிறப்பு வழக்குரைஞரை நியமித்து விசாரணையை துரிதப்படுத்துவதாக அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது

'அவர் நாட்டைவிட்டு தப்பிச்சென்றுவிட்டதாக எங்களுக்கு எந்தவிதமான உறுதியான தகவல்களும் கிடைக்கவில்லை. ஆனால் தங்காலை பகுதியில் அவர் இல்லை என்றுதான் தெரியவந்துள்ளது. தெற்கு பிராந்தியத்தில் அவர் இருக்கக்கூடிய இடம் தொடர்பில் விசாரணை நடத்தி அவரைக் கைதுசெய்யும் முயற்சியில் குழுவொன்று ஈடுபட்டுள்ளது' என்று பதிலளித்தார் எஸ்எஸ்பி அஜித் ரோஹண.

நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்து இன்றுடன் மூன்றாவது நாளாகிறது.ஒரு பயங்கர கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைதுசெய்யக்கூட முடியாத நிலையிலா இலங்கைப் பொலிசார் இருக்கின்றனர் என்று தொடர்ந்தும் தமிழோசை வினவியது.

'பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இன்னும் 72 மணிநேரம் கூட கடக்கவில்லை...அவர் பற்றி தெரிந்துகொள்ள எங்களுக்கும் வேறு வழிகள் இல்லை. உண்மையில் அவர் இப்போது எங்கிருக்கிறார் என்பது சரியாக தெரியாதபடியால் தான் எங்களால் அவரைக் கைது செய்துகொள்ள முடியாமல் இருக்கிறது' என்ற காவல்துறை பேச்சாளர், 'விரைவில் அவரைப் பிடித்துவிடுவோம்' என்றும் கூறினார்.

கடந்த தடவை பிரதான சந்தேகநபர் விதான பத்திரண உட்பட 6 பேருக்கும் பிணை வழங்குவதற்கு இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் ஆட்சேபணை இல்லை என்று கூறியிருந்த நிலையிலேயே கொழும்பு மேல்நீதிமன்றம் அவர்களுக்கு கடந்த நவம்பர் 22-ம் திகதி பிணை வழங்க சம்மதித்தது.

குராம் ஷேக் படுகொலை தொடர்பில் முறையான விசாரணைகள் நடந்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.