'படையினர் என்னைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர்'

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் இராணுவத்தினால் கைதுசெய்யப்பட்ட தமிழ்ப் பெண்ணொருவர் பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பல்வேறு கொடூரங்களுக்கு உள்ளானதாக பிபிசி தமிழோசையிடம் கூறியுள்ளார்.
2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சுமார் ஓராண்டு காலம் வவுனியா செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாமில் இருந்த தான், அதன்பின்னர் 2010-ம் ஆண்டு மே மாதமளவில் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டதாக 'பவானி' என்ற பெயரில் மட்டும் தன்னை அறிமுகப்படுத்தும் அந்தப் பெண் தெரிவித்தார்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக தனது முழுப் பெயரை பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
வவுனியாவில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் 7 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த தன்னுடன் மேலும் நான்கு பெண்பிள்ளைகள் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாகக் கூறிய அந்தப் பெண், இராணுவத்தினர் தம்மை நிர்வாணப்படுத்தி வைத்திருந்ததாகவும் பல்வேறு பாலியல் கொடூரங்களுக்கு உள்ளாக்கியதாகவும் பிபிசியிடம் தெரிவித்தார்.
தற்போது பிரிட்டனில் வசிக்கும் இந்தப் பெண், தம்மைப் போல பாலியல் கொடூரங்களுக்கு உள்ளான பெண்களுக்கு நீதி கிடைப்பதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இராணுவம் மறுப்பு

பட மூலாதாரம், pccsl.lk
இதேவேளை இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.
வெளிநாடுகளில் அகதித் தஞ்சம் கோருவதற்காக இப்படியான பலர் பொய்யான கதைகளை சோடித்துக் கூறிவருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய பிபிசியிடம் கூறினார்.
யுத்தம் முடிவடைந்த காலப்பகுதியான 2010-ம் ஆண்டில் வவுனியாவில் இப்படியான சம்பவம் நடந்திருந்தால் காவல்துறையிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.
இராணுவத்தின் மீதான குற்றச்சாட்டுக்களை உரிய தகவல்களுடன் முறைப்பாடாக முன்வைத்தால், இராணுவம் விசாரணை நடத்தும் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
யுத்த மோதல்களின்போது பாலியல் கொடூரங்கள் நடப்பதைத் தடுப்பதற்காக உலகநாடுகளின் தலைவர்கள் லண்டனில் நான்கு நாள் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.
மோதல்களின்போது பாலியல் கொடூரங்களை ஒழிப்பதற்கான பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ள நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.
பிரகடனத்தை இலங்கை அங்கீகரிக்காத நிலையில், இந்த மாநாட்டிற்கு தமக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளதாக லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் கூறுகின்றது.