தமிழக மீனவர் பிரச்சனை: மன்னார் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும்கூட, வடபகுதி கடலில் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பது அதிகரிப்பதைச் சுட்டிக்காட்டி, அவர்களின் வருகையை முற்றாகத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மன்னார் மாவட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை திங்களன்று நடத்தியிருக்கின்றார்கள்.
மன்னார் மாவட்ட மீனவர் சம்மேளனம் இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள பாலத்தில் இருந்து புறப்பட்ட மீனவர்களின் கண்டனப் பேரணி மன்னார் வைத்தியசாலை, பொது விளையாட்டு மைதானம் வழியாக மன்னார் அரச செயலகத்தைச் சென்றடைந்து அங்கு மகஜர் கையளிப்புடன் முடிவடைந்தது.
முன்னதாக ஜனாதிபதிக்கும் மற்றும் முக்கியஸ்தர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவதற்கான மகஜர் பிரதிகளை மன்னார் அரச செயலக அதிகாரிகள் வெளியில் வந்து பெற்றுக்கொள்வதற்கு மறுப்பு தெரிவித்ததையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச செலயகத்தின் எதிரில் வீதியில் வாகனப் போக்குவரத்துக்களைத் தடுத்து மறியலில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து மன்னார் மேலதிக அரச அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மெல் வெளியில் வந்து மன்னார் மாவட்ட மீனவர் சம்மேளனத் தலைவர் ஜஸ்டின் சொய்சாவிடம் மகஜரைப் பெற்றுக்கொண்டார்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி இந்தியப் பிரதமருடன் திங்களன்று நடத்தும் பேச்சுவார்த்தைகளில் இருநாட்டு மீனவர் பிரச்சினையும் முக்கிய இடம்பெறுவதனால், அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமது பிரச்சினைக்கு சுமுகமான ஒரு தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என இருநாட்டு தலைவர்களினதும் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இந்த ஆர்ப்பாட்டப் பேரணியும் மகஜர் கையளிப்பும் நடைபெற்றதாக மன்னார் மாவட்ட மீனவர் சம்மேளனத் தலைவர் ஜஸ்டின் சொய்சா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
குறுகிய காலத்தில் இந்திய மீனவர்களின் வருகையை முற்றாகத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தாங்களே, இந்தியப் படகுகளைக் கைப்பற்றி, அவற்றை இலங்கைக் கடற்பரப்பினுள் வரவிடாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட நேரிடும் என்று அச அதிகாரிகளிடம் எச்சரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
நீண்டகாலமாக தீர்க்கப்படாத இந்தப் பிரச்சினை காரணமாக வடபகுதி மீனவர்கள் மேலும் மேலும் பாதிக்கப்படுவதாகவும், பெயரளவில் நடவடிக்கை எடுக்கும் வகையில் எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களின் படகுகள் தடுத்து வைக்கப்படுவதும், பின்னர் மீனவர்களையும் அந்தப் படகுகளையும் விடுவிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வருவதைத் தடுத்து நிறுத்துவதுடன், இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளினால் சேதமாக்கப்பட்ட பல கோடி ரூபா பெறுமதியான வடபகுதி மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களுக்கும், மீனவர்கள் இடம்பெயர்ந்து இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது, தமிழக அரச அதிகாரிகளிடம் தாங்கள் கையளித்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகளைத் திருப்பித் தரும் வகையில் நிவாரணக் கொடுப்பனவு அல்லது புதிய படகுகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் மன்னார் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.