நிதி பற்றாக்குறையால் நாய்க்கடிக்கு ஆயிரக்கணக்கான குழந்தைகள் பலி

நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போட போதுமான நிதியின்மையால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் நாய்கடிக்கு பலியாவதாக சர்வதேச மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகளவில் ரேபீஸ் நோயால் கொல்லப்படும் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களில் பாதியளவினர், அதாவது 55,000 பேர் சிறார்களே என்று, பிராணிகள் நலன்களுக்கான உலக அமைப்பு தெரிவித்துள்ளது.
தொற்று நோய் ஏற்பட்டுள்ள நாய்களின் மூலமே சிறார்களுக்கு இந்தக் கொடிய நோய் பரவுகிறது என்று அந்த அமைப்பின் ஆய்வு கூறுகிறது.
மிகக் குறைந்த அளவு நிதியாரங்கள் இருந்தாலே ரேபீஸ் நோயை முற்றாக ஒழித்துவிட முடியும் என்று அந்த அமைப்பின் தலைவர் டாக்டர் பெர்ணார்ட் வாலட் பிபிசியிடம் தெரிவித்தார்.
ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை குணமடையச் செய்யும் மருத்துவச் செலவைவிட, நோயை ஒழிப்பதற்கான செலவு மிகவும் குறைவு, ஆனால் ரேபீஸ் நோய் ஒழிப்பை முன்னுரிமையாக சர்வதேச கொடையாளி அமைப்புகள் எடுத்துக் கொள்வதில்லை எனவும் டாக்டர் வால்ட் வருந்தினார்.




























