நமீபியா: விலங்குகளைக் காக்க வேட்டைக்கு அனுமதி!
கென்ய அதிபர் நூற்றி ஐந்து டன் யானைத்தந்தங்களை தீயிட்டு அழித்தார்.
யானை வேட்டையை தடுப்பதற்காக நடந்த ஆப்ரிக்கத் தலைவர்களின் மாநாட்டின் முடிவில் அவர் செய்த செயல் சட்டவிரோத யானைத்தந்த வர்த்தகத்துக்கு எதிரான பகிரங்க எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
கிழக்கு நமீபியாவில் கப்ரிவி ஸ்ட்ரிப் என்னும் இடத்தில் சட்டப்படியான, கட்டுப்படுத்தப்பட்ட வேட்டையை அனுமதிப்பதன் மூலம் யானைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அங்கே அனுமதிக்கப்படும் trophy hunting எனப்படும் பொழுதுபோக்கு வேட்டையாடுபவர்கள் கொண்டுவரும் வருமானம் இந்த பகுதி மக்களின் முக்கிய வருமானமாக இருக்கிறது.
முன்னாள் சட்டவிரோத வேட்டையாளர்கள் இன்று விலங்கு பாதுகாவலர்களாகியுள்ளனர்.
இப்படி வேட்டையாடப்படும் விலங்குகளின் எண்ணிக்கைக்கெல்லாம் ஒதுக்கீடு இருக்கிறது. ஆண்டுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கை விலங்குகள் மட்டுமே வேட்டையாட அனுமதிக்கப்படும். அவற்றின் இறைச்சி உள்ளூர் மக்களுக்கு அளிக்கப்படும். வேட்டையாடுபவர்கள் பல ஆயிரம் டாலர்கள் கட்டணமாக தருகிறார்கள். எல்லாமே உள்ளூர் மக்களுக்குச் செல்கிறது.
“அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் தானாக இறக்கப்போகும் முதிய விலங்குகள் மட்டுமே வேட்டையாட அனுமதிக்கப்படும். முதுமையால் இறக்கும் விலங்கைப் பயன்படுத்தி உள்ளூர் மக்களுக்கு கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாமே”, என்கிறார் டகா பாய் சஃபாரிஸ் என்கிற நிறுவனத்தைச் சேர்ந்த தொழில்முறை வேட்டைக்காரர் டேவிட் முல்லர்.
இந்த ஊரின் இயற்கை வளங்களை உள்ளூர் மக்களே நிர்வகிக்கிறார்கள். எவ்வளவு விலங்குகள் இருக்கின்றன என்கிற கணக்கெடுப்பின் மூலம் எத்தனை விலங்குகளை வேட்டையாட அனுமதிக்கலாம் என அவர்களே முடிவு செய்கிறார்கள். வரும் வருமானம் வனக்காவலர்களுக்கும், கிராம மின்சாரத்துக்கும் செலவாகிறது. ஊழலில்லாவிட்டால் நல்ல பலனும் தருகிறது.
“இந்த வேட்டையை நிறுத்தினால் அதனால் வரும் வருமானமும் நின்றுவிடும். மக்கள் பாதிக்கப்படுவார்கள். பிள்ளைகளின் கல்வி, பெரியவர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும். அவர்களில் சிலர் சட்டவிரோத வேட்டையில் ஈடுபடுவார்கள்", என்கிறார் பாமுனு கன்சர்வன்ஸி தலைவர் சுங்கா சுங்கா.
இத்தகைய வனப்பாதுகாப்பில் விலங்குகளின் உயிருக்கு உண்மையான விலை கிடைக்கிறது. இவை அழிக்கும் பயிர்கள், எப்போதேனும் கொல்லும் குழந்தைகளின் பெற்றோருக்கு உரிய இழப்பீடும் கிடைக்கிறது. இதில் யானைகளும் மனிதர்களும் ஒரே சமயத்தில் பயனடையவும் கூடும்.