ஐபிஎல்: மோசமான பேட்டிங்கால் வீழ்ந்த டெல்லி

ஐபிஎல் 2019: மோசாமான பேட்டிங்கால் வீழ்ந்த டெல்லி
பிரசுரிக்கப்பட்டது

டெல்லி மற்றும் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே வியாழக்கிழமையன்று டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வென்றது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் தொடக்கத்தில் தடுமாறியது. தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் முறையே 11 மற்றும் 12 ரன்கள் எடுத்தனர்.

டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 41 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இதில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் ஆகியவையும் அடங்கும்.

ஆனால், இதன்பின் களமிறங்கிய டெல்லி வீரர்களால் களத்தில் நிலைத்து விளையாட முடியவில்லை. ரிஷப் பந்த் மற்றும் இங்க்ராம் உள்ளிட்ட வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கடைசி நேரத்தில் கிறிஸ் மோரிஸ், அக்சர் பட்டேல் ஆகியோர் அடித்த ரன்களால் டெல்லி அணி 129 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து விக்கெட்டுகள் இழந்தது மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் தவிர மற்ற டெல்லி அணி வீரர்கள் யாரும் பொறுப்புடன் விளையாடதது ஆகியவற்றால் அந்த அணியால் போதுமான அளவில் ரன்கள் குவிக்க முடியவில்லை.

ஷ்ரேயாஸ் அய்யர்
படக்குறிப்பு, ஷ்ரேயாஸ் அய்யர்

அதே வேளையில் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில் நேர்த்தி இருந்தது, அந்த அணிக்கு பெரிதும் கைகொடுத்தது. முஹம்மது நபி, ரஷித் கான் சிறப்பாக பந்துவீசி ரன்களை வெகுவாக கட்டுப்படுத்தினர்.

புவனேஸ்வர் குமார், முஹம்மது நபி, சித்தார்த் கௌல் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி தொடக்க வீரர் டேவிட் வார்னரை விரைவாக இழந்தது.

ஆனால், மறுமுனையில் விளையாடிய பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடினார். அவர் தந்த அதிரடி துவக்கம் ஹைதராபாத் அணிக்கு வெற்றியை எளிதில் தந்தது. 28 பந்துகளில் 48 ரன்கள் அவர் குவித்தார்.

இறுதியில் 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி போட்டியை எளிதாக வென்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :