ஐபிஎல் 2019: அல்ஜாரி ஜோசப்பின் அபாரமான பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி

ஜோசப்
பிரசுரிக்கப்பட்டது

நேற்றைய ஐபிஎல் போட்டிகளில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது சென்னை அணி மற்றொரு போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை 40 ரன்களில் வீழ்த்தியது மும்பை அணி.

இந்த இரண்டாம் போட்டியில் மும்பை இந்தியன்ஸின் பந்து வீச்சாளர் அனைவரின் கவனத்தையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

அடித்து ஆடிய தோனி

பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்கள் வேகம் காட்ட தொடங்கிய நேரத்தில் ரன் எடுக்கும் வேகத்தை அதிகப்படுத்தினார் தோனி. ஒரு கட்டத்தில் சென்னை13.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளுக்கு 100 ரன்களை எடுத்திருந்தது. அந்த சமயத்தில் தோனியும், அம்பதி ராயுடுவும் விளையாடிக்கொண்டிருந்தனர்.

கடந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெடுகளை எடுத்த சாம் குர்ரனின் பந்துவீச்சை அடித்து ஆடத் தொடங்கினார் தோனி.

மறுபக்கத்தில் இருக்கும் அம்பதி ராயுடுவும் உற்சாகம் அடைந்து மொகமத் ஷமியின் பந்து வீச்சில் அடித்து ஆடினார்.

தோனி

இந்த வகையில் 23 பந்துகளில் 37 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார் தோனி என்று சொல்லலாம்.

ஆனால் சென்னையின் வெற்றிக்கு காரணம் கே.எல்.ராகுல் மற்றும் சர்ஃபராஸ் என்கின்றன சமூக ஊடகங்கள்.

பஞ்சாப் அணிக்கு இலக்காக 161 ரன்கள் வைக்கப்பட்டது. ஆனால் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்களில் 138 ரன்களை மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது.

கே.எல்.ராகுல் 55 ரன்களையும், சர்ஃபராஸ் கான் 67 ரன்களை எடுத்திருந்தபோதும் அவர்களால் சென்னை அணியின் பந்து வீச்சாளர்களை எதிர் கொள்ள முடியவில்லை.

17 ரன்களை மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்திருந்தார் ஹர்பஜன் சிங்.

வெற்றிக்கு பிறகு பேசிய தோனி, 160 ரன்கள் வெற்றிக்கு போதாது ஆனால் ஹர்பஜன் சிங் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை எளிதாக்கி விட்டார் என்று தெரிவித்தார்.

புயல் வேக ஜோசப்

ஐபிஎல்லின் இரண்டாவது போட்டியில், அல்சாரி ஜோசப்பின் புயல் வேக பந்து வீச்சால் ஐதராபாத் அணியை 40 ரன்களில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.

நேற்றைய போட்டியில் 3.4 ஓவர்களில் வெறும் 12 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜோசப்பின் வேகம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

11 ஆண்டுகளாக இருந்த பவுலிங் சாதனையை முறியடித்தார் ஜோசப்.

இதற்கு முன் இந்த சிறப்பை ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியின் சோஹைல் தன்வீர் பெற்றிருந்தார். சென்னை அணிக்கு எதிராக 4 ஓவர்களில் 14 ரன்களை கொடுத்து 6 விக்கெட்டுகளை பெற்றிருந்தார் அவர்.

ஐபிஎல் வரலாற்றிலேயே ஜோசப்பின் சாதனை சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.

பாராட்டு மழை

போட்டி முடிந்ததும் கிரோன் போலார்ட் ஜோசப்பை தோலில் தூக்கி கொண்டாடினார்.

போட்டி வர்ணனையாளர்கள், கெவின் பீட்டர்சன், டீன் ஜோன்ஸ் மற்றும் ஸ்காட் ஸ்டிரீஸ், தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து கைகளை தட்டி பாராட்டினர்.

"ஜோசப்பின் ஆட்டம் பாராட்டுக்குரியது." என்று தெரிவித்தார் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா

டேவிட் வார்னர், விஜய் சங்கர், தீபக் ஹூடா, ரஷித் கான் மற்றும் ஐதாராபாத் அணியின் கேப்டன் புவனேஷ்வர் குமார் மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் ஜோசபிடம் விக்கெட்டை பறிக்கொடுத்தவர்கள்.

யார் இந்த ஜோசப்?

வெஸ்ட் இண்டீஸ்

இந்த பிப்ரவரி மாதம், தனது தாய் இறந்துவிட்டார் என்று கேட்டும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியை தொடர்ந்து ஆடினார் என்பதால் செய்திகளில் இடம்பிடித்தார் ஜோசப்.

2016ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையை வென்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் இடம் பிடித்திருந்தார் அல்சாரி ஜோசப்.

உலகக் கோப்பையின் கடைசி போட்டியில், ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

அந்த போட்டியில் அல்சாரி ஜோசப் 39 ரன்களை கொடுத்து மூன்று விக்கெட்டுகளை எடுத்திருந்தார். எனவே வெறும் 145 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பியது இந்திய அணி.

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேக பந்து வீச்சாளர் ஆடம் காயம் காரணமாக வெளியேறியதால் அணியில் இடம் பெற்றார் ஜோசப். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியால் வெறும் 75 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

சனிக்கிழமையன்று மலிங்காவிற்கு பதிலாக அணியின் 11ஆவது நபராக சேர்க்கப்பட்டார். இது எல்லாமே தனக்கு ஒரு கனவு போன்று உள்ளது என்கிறார் ஜோசப்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :