ஊக்க மருந்து சர்ச்சையில் இந்திய பாரலிம்பிக் வீரர்

லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் மாற்றுத் திரனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் தொடங்குவதற்கு முன்னரே இந்திய அணி சர்ச்சையில் சிக்கியுள்ளது.
பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்குபெற தேர்வாகியிருந்த ஷரத் குமார் ஊக்கமருந்து பயன்படுத்தியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
இருவாரங்களுக்கு முன் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற தேர்வாகியிருக்கும் அனைத்து தடகள வீரர்களிடம், ஊக்க மருந்து பயன்பாட்டுக்கு எதிரான இந்திய தேசிய அமைப்பு பரிசோதனைகளை மேற்கொண்டது.
அப்படி நடத்தப்பட்ட முதல் பரிசோதனையில் (ஏ சாம்பிள்) ஷரத் குமார் தடை செய்யப்பட்டிருந்த ஊக்கமருந்து பயன்படுத்தியிருந்தது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று இந்திய பாராலிம்பிக்ஸ் அணியின் மேலாளரும் பயிற்சியாளருமான முகமது நிசாமுதீன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
எனினும் அவரின் இரண்டாம் பரிசோதனை (பி சாம்பிள்) முடிவுகள் வந்த பிறகே அவர் தவறிழைத்துள்ளாரா இல்லையா என்பது தெரியவரும் எனவும், அதன் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை முடிவாகும் எனவும் நிசாமுதீன் கூறுகிறார்.
சர்ச்சைகுள்ளாகியிருக்கும் வீரர் ஷரத் குமார், மாற்று திரனாளிகளுக்கான ஆடவர் பிரிவில் உயரம் தாண்டும் போட்டியில் உலகளவில் முதலிடத்தில் இருக்கிறார் எனவும், அவர் பாராலிம்பிக் போட்டியில் பங்குபெற முடியத ஒரு சூழல் ஏற்பட்டால், அது இந்திய அணிக்கு பெரும் இழப்பாக இருக்கும் எனவும், பதக்கப்பட்டியிலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் நிசாமுதீன் கூறுகிறார்.
தற்போது குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் ஷரத் குமார், ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒரு அறுவை சிகிசை செய்து கொண்டார் எனவும், அப்போது அவருக்கு அளிக்கப்பட்ட மருந்துகளால் இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகிறார்.
இருந்தபோதிலும் ஷரத் குமார் மீது தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதே தவர அவர் குற்றவாளி என்பது உறுதி செய்யப்படவில்லை எனவும் நிசாமுதீன் சுட்டிக்காட்டுகிறார்.

























