இந்த ஆண்டின் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் தொடங்கின

விம்பிள்டன் 127
படக்குறிப்பு, விம்பிள்டன் 127
பிரசுரிக்கப்பட்டது

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் 127 ஆவது ஆண்டு ஆட்டங்கள் இன்று முதல் லண்டனில் நடைபெறுகின்றன.

முதல் நாள் போட்டியில் உலகின் பல முன்னணி வீரர்களும், விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ள பலரும் ஆடுகின்றனர்.

நடப்புச் சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும் கடந்த ஆண்டு அவரிடம் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிரிட்டனின் ஆண்டி மர்ரியும் தமது முதல் சுற்றுப் போட்டிகளில் இன்று விளையாடுகிறார்கள்.

ஆடவர் பிரிவில் நடப்புச் சாம்பியன் ரோஜர் ஃபெடரர்
படக்குறிப்பு, ஆடவர் பிரிவில் நடப்புச் சாம்பியன் ரோஜர் ஃபெடரர்

அதேபோல ஆடவர் பிரிவில் இதுவரை யாரும் வெல்லாத வகையில், எட்டு முறை ஒரு கிராண்ட் ஸ்லாம் போட்டியை வென்றுள்ள ரஃபேல் நடாலும் தனது முதல் சுற்றில் இன்று ஆடுகிறார்.

மகளிர் பிரிவு போட்டிகளில் முன்னாள் சாம்பியன் மரியா ஷரப்போவா, உலகளவில் மகளிர் தரப்பட்டியலில் இருக்கும் பேலாரூஸ் நாட்டின் விக்டோரியா அஸ்ரென்கா ஆகியோரும் தமது முதல் சுற்றுப் போட்டிகளை இன்று விளையாடுகிறார்கள்.

முதல் நாள் ஆட்டத்தில் ஆடவுள்ள மரியா ஷரப்போவா
படக்குறிப்பு, முதல் நாள் ஆட்டத்தில் ஆடவுள்ள மரியா ஷரப்போவா

போட்டிகளின் முதலாவது ஆட்டத்தில் பங்குபெறும் பெருமை நடப்பு சாம்பியனான ரோஜர் ஃபெடரருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏழு முறை விம்பிள்டன் ஆடவர் பட்டத்தை வென்றுள்ள ஃபெடரர் தனது முதல் போட்டியில் ருமேனியாவின் விக்டர் ஹனெஸ்கோவை எதிர்த்து ஆடுகிறார்.

உலகின் முன்னணி டென்னிஸ் போட்டி என்று கருதப்படும் விம்பிள்டன் போட்டிகள்
படக்குறிப்பு, உலகின் முன்னணி டென்னிஸ் போட்டி என்று கருதப்படும் விம்பிள்டன் போட்டிகள்

இந்த ஆண்டு விம்பிள்டனில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை ரோஜர் ஃபெடரர் வென்றால், இதுவரை யாரும் வென்றிராத வகையில் எட்டாவது முறையாக பட்டத்தை வென்றவர் எனும் பெருமையைப் பெருவார்.

அண்மையில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகளை எட்டாவது முறையாக வென்று சாதனைப் படைத்த ரஃபேல் நடால் தனது முதலாவது ஆட்டத்தில் பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்ஸிசை எதிர்த்து ஆடுகிறார்.

நோவாக் யாக்கோவிச் மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் பங்கு பெறும் முதல் சுற்றுப் போட்டிகள் முதல் நாள் பட்டியலில் இல்லை.