சோச்சி ஒலிம்பிக்: இந்தியக் கொடியின் கீழ் இந்தியர்கள் பங்குகொள்ளவில்லை

ரஷ்யாவின் தென் பகுதி நகரான சோச்சியில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வெள்ளியன்று தொடங்கும் வேளையில், அதில் பங்கேற்கின்ற இந்திய வீரர்கள் தேசியக் கொடியின் கீழ் பங்கேற்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்திய ஒலிம்பிக் சங்கத் தேர்தல் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் நெறிமுறைகளின்படி அமையவில்லை, ஊழல் சர்ச்சையில் சிக்கியுள்ளவர்கள் முக்கியப் பொறுப்புகளுக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது உட்பட பல காரணங்களை சுட்டிக்காட்டி கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச சம்மேளனம், இந்திய ஒலிம்பிக் சங்கத்தை இடை நீக்கம் செயதிருந்தது.
இதனிடையே இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கான தேர்தல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. அதில் துணைத் தலைவர் பதவியைத் தவிர இதர பதவிகளுக்கு ஒருவரே வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவர்கள் போட்டியின்றி தேர்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இந்தத் தேர்தல் சோச்சி போட்டிகள் தொடங்கிய பிறகே நடைபெறுவதால், இந்திய வீரர்கள் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் கொடியின் கீழேயே பங்குபெறும் நிலை உருவாகியுள்ளது.
இப்போட்டிகளின் போது, இந்திய வீரர்களுக்கு பதக்கம் வெல்லும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்றாலும், அவர்கள் பதக்கம் பெறுவார்களாயின் அப்போது அரங்கில் இந்திய தேசியக் கொடிக்கு பதிலாக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் கொடியே ஏற்றப்படும்.
இப்படியான ஒரு சூழல் மிகவும் வருந்தத்தக்கது மற்றும் வேதனையளிப்பதாக இருந்தாலும், நடைமுறை சிக்கல்கள் காரணமாக தேர்தலை விரைவாக நடத்த முடியவில்லை என்று, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பை தற்காலிகமாக வகித்து வரும் எஸ் ரகுநாதன் பிபிசி தமிழோசையிடம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற விளையாட்டு அரங்கம் நிகழ்ச்சியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ரஷ்யாவில் இன்று தொடங்கும் சோச்சி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம் முதலே சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.
இப்போட்டிகளின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகள் எழும்பியுள்ளன என்றாலும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்டுள்ளன, எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாது என்று தாங்கள் நம்புவதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
மனித உரிமை மீறல்கள், குறிப்பாக ஒருபால் உறவுக்காரர்கள் தொடர்பாக ரஷ்யா கடைபிடிக்கும் கடும்போக்கு நிலைப்பாடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
ஆனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினோ இப்போட்டிகளுக்கு வருபவர்களுக்கு எந்தச் சிக்கலும் இருக்காது என்றாலும், அவர்கள் ரஷ்யக் கூட்டமைப்பின் சட்டங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு பிரச்சினைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விஷயங்கள் இவற்றையெல்லாம் கடந்து சோச்சிப் போட்டிகள் எப்படி செல்லும்? சொந்த நாட்டின் கொடியின் கீழ் பங்குபெற முடியாத இந்திய வீரர்கள் பதக்கம் வெல்வார்களா? என்பது போன்ற கேள்விகளுக்கு அடுத்த சில தினங்கள் பதில் சொல்லும்.




























