லலித் மோடி தேர்வை அங்கீகரிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு.

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக சர்ச்சைக்குரிய லலித் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை அங்கீகரிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிகள், சட்டங்கள் ஆகியவற்றை யாராவது மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளதை மேற்கோள் காட்டியே அந்த வாரியம் இப்படியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
லலித் மோடி ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியம் அந்த சங்கத்தை இடைநீக்கம் செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பை வாரியத்தின் இடைக்காலத் தலைவர் ஷிவ்லால் யாதவ் பெயரில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை தெரிவிக்கிறது.
ஒழுங்கு நடவடிக்கை

பட மூலாதாரம், AFP
இந்திய கிரிக்கெட் வாரியத்திலிருந்து ராஜஸ்தான் சங்கம் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், அந்தச் சங்கத்தின் மீது முறைகேடுகள் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் வாரியத் தலைவரால் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அதன் செயலர் சஞ்சய் பட்டேல் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
கிரிக்கெட் விளையாட்டின் நலன் கருதியும், அந்த விளையாட்டில் பல மட்டங்களில் ஈடுபட்டுள்ள வீரர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையிலும் ராஜஸ்தான் மாநிலத்தில் கிரிக்கெட் விளையாட்டை நிர்வகிப்பதற்கு ஒரு இடைக்காலக் குழு விரைவில் அமைக்கப்படும் எனவும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்காலத் தலைவர் ஷிவ்லால் யாதவ் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு மேற்பார்வையாளர் முன்னிலையிலேயே ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியச் சங்கத் தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

























