சர்வதேசத் தடகள சம்மேளனத்தின் அடுத்த தலைவர் யார்?

பிரசுரிக்கப்பட்டது

சர்வதேசத் தடகள சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கான மோதல் வலுத்து வருவது போலத் தெரிகிறது.

தலைவர் பதவிக்கு போட்டியிடும் செபாஸ்டின் கோ(இடது) மற்றும் செர்கெய் புப்கா
படக்குறிப்பு, தலைவர் பதவிக்கு போட்டியிடும் செபாஸ்டின் கோ(இடது) மற்றும் செர்கெய் புப்கா

உலகளவில் விளையட்டுத்துறையில் மிகவும் மதிப்பும் மரியாதையும் கொண்ட இந்த அமைப்பின் தலைவராக தற்போது செனிகல் நாட்டைச் சேர்ந்த லெமீன் டியாக் இருக்கிறார்.

அவரது பதவிக் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முடிவடையவுள்ள நிலையில், ஒலிம்பிக் பிரபலங்களான பிரிட்டனின் சபாஸ்டின் கோவும், உக்ரைனின் செர்ஜேய் புப்காவும் சர்வதேசத் தடகள சம்மேளனத் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இருவரும் அந்த சம்மேளனத்தின் துணைத் தலைவர்களாக இருக்கின்றனர்.

செபாஸ்டின் கோ ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இரு முறை ஒலிம்பிக் பட்டத்தை வென்றவர்.

சாதனையாளர்

அவரை எதிர்த்து போட்டியிடவுள்ள செர்கெய் புப்கா போல்வால்ட் போட்டியில் அதாவது கழியூன்றித் தாண்டுதலில் உலகளவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர்.

புப்கா 35 முறை போல் வால்ட் போட்டியில் உலகச் சாதனைப் படைத்தவர். அவர் 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்.

தற்போது உக்ரைன் நாட்டு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக இருக்கும் செஜெய் புப்கா, லெமீன் டியாக் வகுத்த பாதையை மேலும் கட்டியெழுப்ப விரும்புவதாகக் கூறுகிறார்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள சர்வதேசத் தடகள சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புகிறவர்கள் முறைப்படி எதிர்வரும் மே மாதத்துக்கு முன்னர் அதற்கான பதிவைச் செய்ய வேண்டும்.

பின்னர் பீஜிங்கில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள அந்தச் சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல் நடைபெறும்.

லெமீன் டியாக் சுமார் 25 வருடகாலம் சர்வதேச தடகள சம்மேளனத்தின் தலைவராக இருக்கிறார்.

ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர்கள் மிக மிகக் குறைவான அளவிலேயே சர்வதேச அளவில் விளையாட்டுத்துறையின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.