உயிரிழந்த பியான்ச்சிக்கு புகழஞ்சலி

பட மூலாதாரம், EPA
பிரான்சின் நீஸ் நகர மருத்துவமனையில் மாதக்கணக்கில் கோமாவில் இருந்து பின்னர் உயிரிழந்துள்ள அந்நாட்டின் ஃபார்முலா ஒன் அதிவேக கார்ப் பந்தய வீரர் ஜூல்ஸ் பியான்ச்சிக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டின் ஜப்பான் கிராண்ட் பிரீ பந்தயத்தில் கடுமையாக மழைபெய்த நேரத்தில் இவர் கார் விபத்துக்குள்ளாக அவருக்கு தலையில் மோசமான காயங்கள் ஏற்பட்டிருந்தன.
கடுமையான ஒரு போராட்டத்துக்குப் பின்னர் பியான்ச்சியை பறிகொடுப்பது தாங்க முடியாத மனவேதனையைத் தருவதாக பியான்ச்சியின் ஃபார்முலா ஒன்று அணியான மேனொர் விவரித்துள்ளது.
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரிழப்பு என அவரது குடும்பம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒன்பது மாதங்களாக அவரிடம் அளப்பரிய அன்பு பாராட்டி வந்த நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
அந்த அன்பும் ஆதரவும் தமக்கு பெரும் வலிமையைத் தந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.




























