சர்வதேசப் போட்டிகளிலிருந்து ரஷ்யாவை இடைநீக்க 'வாடா' கோரிக்கை
ரஷ்யா பரந்துபட்ட அளவில் ஊக்க மருந்து பயன்பாட்டை ஊக்குவித்தது எனக் கூறி, சர்வதேச தடகளப் போட்டிகளில் இருந்து அந்நாட்டை இடைநீக்கம் செய்ய வேண்டும் என ஊக்க மருந்து பயன்பாட்டுக்கு எதிரான சர்வதேச அமைப்பு கோரியுள்ளது.

பட மூலாதாரம், Getty
'வாடா' என்று அறியப்படும் அந்த சர்வதேச அமைப்பால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவொன்று மிகக்கடுமையாக விமர்சிக்கும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ரஷ்ய அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் அந்நாட்டின் விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து பயன்பாட்டில் ஈடுபட்டிருக்க முடியாது என அந்த ஆணைக்குழு கூறியுள்ளது.

பட மூலாதாரம், AP
ஐந்து ரஷ்ய தடகள வீரர்கள், ஐந்து பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு சர்வதேசத் தடகளச் சம்மேளனம் வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த ஆனையம் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் முடிவுகளை ரஷ்ய தடகள வீரர்கள் முறையற்ற நடவடிக்கை காரணமாக குலைத்துவிட்டனர் எனவும் அந்த அறிக்கை கடுமையாக சாடியுள்ளது.

பட மூலாதாரம், Getty
ரஷ்யாவின் தடகளத் துறையில் மட்டுமே ஊக்க மருந்து பயன்பாடு இருந்துள்ளது எனக் கூற முடியாது எனவும் அந்த ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது.
தடகள விளையாட்டில் நிலவும் ஊழல் குறித்த விசாரணைகள் தொடர்பிலான விசாரணைகளை தாங்கள் ஒருங்கிணைத்து நடத்தவுள்ளதாக இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலிஸ் அமைப்பு கூறியுள்ளது.

சர்வதேச தடகள சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் லியாம் டியாக் ஊக்க மருந்து பயன்பாடு தொடர்பான ஊழலில் தொடர்புபட்டிருந்தார் என அவர் மீது பிரெஞ்சு அரச வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டியிருந்தனர்.
ஊக்க மருந்து பயன்பாடு தொடர்பான நடவடிக்கைகளை மூடி மறைக்க அவர் கையூட்டு பெற்றார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.
குறிப்பாக ரஷ்யர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மீது அவர் பாராமுகமாக இருந்தார் என பிரெஞ்ச் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

























