ஓலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸில் இந்தியப் பெண்

பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் முன்னணி ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், ரியோ டி ஜெனீரோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளார்.

ஓலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் இந்தியப் பெண்
படக்குறிப்பு, ரியோ போட்டிக்கு தகுதிபெற்றுள்ள தீபா கர்மாகர்

ஓலிம்பிக் ஒன்றில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இவர் கிளாஸ்கோவில் கடந்த 2014ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளிலும் அவர் பதக்கம் ஒன்றை வென்றிருந்தார்.

ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ள செய்தி இந்தியாவில் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.

இந்திய அரசாங்கம் ஜிம்னாஸ்டிக் விளையாட்டுக்கு குறிப்பிடத்தக்க அளவு நிதி வழங்காத சூழலில், தீபா கர்மாகர் தனது பயிற்சியை சொந்த முயற்சியில் மிகவும் எளிமையாகவே ஆரம்பித்திருந்தார் எனவும் அறியப்படுகிறது.

தான் பங்கேற்ற முதலாவது ஜிம்னாஸ்டிக் போட்டியில் ஷூ இல்லாமலும் இரவலாக வாங்கிய, அளவில் பெரிய, தனக்கு பொருத்தமில்லாத ஜிம்னாஸ்டிக் உடையை அணிந்து கொண்டுதான் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது என அவர் தனது முதல் போட்டி அனுபவம் குறித்து பிபிசிக்கு தெரிவித்தார்.

பல ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் ஆடவர்கள் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்குபெற்றிருந்தாலும், குறிப்பிடத்தகுந்த வெற்றியை ஈட்டவில்லை.