தமிழோசையால் ஒளிர்ந்த மலையகத் தோட்டம்

மின் இணைப்பு பெற்றுள்ள சவுத் வனராஜா தோட்டம்
படக்குறிப்பு, மின் இணைப்பு பெற்றுள்ள சவுத் வனராஜா தோட்டம்
பிரசுரிக்கப்பட்டது

இலங்கையின் மலையகப் பகுதியில் இருக்கும் ஒரு தோட்டத்துக்கு பிபிசி தமிழோசையின் ஒலிபரப்பு காரணமாக சுமார் எண்பது ஆண்டுகளாக கிடைக்காமல் இருந்த மின்வசதிகள் தற்போது கிடைத்துள்ளதாக உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.

நுவரேலியா மாவட்டம் மஸ்கலியப் பகுதிக்கு அருகில் இருக்கும் சவுத் வனராஜா தோட்டத்துக்கு அருகிலேயே இலங்கையின் முதல் நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டிருந்தும் கூட இந்த தோட்ட மக்களுக்கு மின் இணைப்புகள் இல்லாத சூழல் இருந்தது.

இது குறித்து தமிழோசை ஒலிபரப்பிய-மலருமா மலையக மக்களின் வாழ்க்கை-எனும் சிறப்புத் தொடர் ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.

அப்போது தமிழோசையிடம் கருத்து தெரிவித்த இலங்கை அரசின் பொருளாதாரத்துறையின் துணை அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஒரு மூத்த தலைவருமான முத்து சிவலிங்கம், இப்பிரச்சினையை தமது பார்வைக்கு கொண்டுவந்ததற்கு நன்றி என்றும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

மரங்களை வெட்டி இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன
படக்குறிப்பு, மரங்களை வெட்டி இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன

அந்தத் தோட்டத்து மக்கள் தம்மை வந்து சந்திதத்து பேசிய பிறகு இதற்கான முன்னெடுப்புகள் செய்யப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.

தமிழோசை ஒலிபரப்பையும், அதற்கு அமைச்சர் அளித்த பதிலையும் கேட்ட பிறகு அப்பகுதியின் மாகாண சபை உறுப்பினர் முரளி ரகுநாதன், தமது கட்சியின் தலைவரான மனோ கணேசனுடன், இப்பகுதி மக்களில் சிலரை கொழும்பு அழைத்துச் சென்று அமைச்சரை சந்தித்து இது தொடர்பிலான பணிகளை விரைவாக முன்னெடுக்குமாறு கோரியாதாகவும், அதற்கு அரச தரப்பில் உறுதிமொழி வழங்கப்பட்டதாகவும் கூறுகிறார்.

அதன் அடிப்படையில் பொங்கல் திருநாள் முதல் அந்தத் தோட்டத்துக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன எனவும், அங்குள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.