நல்லிணக்கம் கோரும் முஸ்லிம் சிவில் சமூகம்

நல்லிணக்கம் கோரும் முஸ்லிம்கள்
படக்குறிப்பு, நல்லிணக்கம் கோரும் முஸ்லிம்கள்
பிரசுரிக்கப்பட்டது

இலங்கையில் முஸ்லிம் சிவில் சமூகம் என குறிப்பிட்டு நூற்றிற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒப்பமிட்டு இனங்களுக்கிடையில் இணக்கப்பாடு தொடர்பான அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் போர் முடிவிற்கு வந்த பின்னர் பல்வேறு விடயங்களில் கனிசமான முன்'னேற்றங்கள் காணப்பட்டாலும் மீள் இணக்கத்திற்கான தடைகள் இன்னமும் சவாலாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் இனப் பிரச்சினைக்கான தீர்வு யொசனையொன்றை இதுவரை முன் வைக்காமை, தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கிடையில் இனப் பிரச்சினை விடயம் தொடர்பாக ஒருமித்த கருத்து எட்டப்படாமை போன்றவை இரு சமூகங்களும் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் என அறிக்கையில் கையொப்பமிட்ட ஒருவரான நிந்தவூரைச் சேர்ந்த மீராலெப்பை லியாகத் அலி தெரிவித்தார்.

அதிகாரம் மற்றும் வகைப் பொறுப்பு சார்ந்த விடயங்களில் கணிசமான இடைவெளிகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் முஸ்லிம் சமூகம் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

முஸ்லிம் அரசியல் தலைமைகள் கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒருமித்து செயல்பட வேண்டும் என்பதை இந்த அறிக்கை வலியுறுத்துவதாக சாய்ந்தமருதைச் சேர்ந்த மொகமுட் முஸ்தபா உதுமான் லெப்பை இது தொடர்பாக தனது கருத்தை வெளியிட்டார்.

இந்த அறிக்கை குறிப்பாக முஸ்லிம்களிடையே வாதப் பிரதிவாதங்களையும் தோற்றுவித்துள்ளது. கொழும்பிலிருந்து கொண்டு வெளியிடப்படும் இப்படியான அறிக்கைகளினால் எதையும் சாதித்துவிட முடியாது என சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். அவர்களில் ஒருவரான கல்முனையைச் சேர்ந்த கச்சி மொகமட் நசீர், அறிக்கையில் ஒப்பமிட்டுள்ளவர்களில் பலர் மக்களுக்கு பரிச்சயமானவர்கள் அல்ல என்றார்.

இந்த அறிக்கையைப் பொறுத்தவரை நாட்டிலுள்ள பிரதான முஸ்லிம் நிறுவனங்கள் மற்றும் ,அமைப்புகளின் பிரதிநிதிகள் தொடர்புபட்டிருப்பதாக கையொப்பங்களில் காண முடியவில்லை என்ற கருத்தும் முஸ்லிம்களிடையே காணப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.