சுகாதாரத்துறைக் கண்காணிப்பாளர் அடித்துக் கொலை; சக ஊழியர்கள் வேலைநிறுத்தம்

இலங்கையில் டெங்கிக் காய்ச்சல் பரவியுள்ளதா என்று ஒரு வீட்டுக்குள் பரிசோதிக்கச் சென்ற சுகாதாரத்துறைக் கண்காணிப்பாளர் கொலைசெய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து இலங்கையின் சுகாதாரத்துறைக் கண்காணிப்பாளர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்புடன் தாங்கள் பணியாற்றுவதற்கான சூழல் ஏற்படுத்தித் தரப்பட வேண்டுமென இவர்கள் கோருகின்றனர்.
நேற்று நடந்த ஒரு அதிர்ச்சிகர சம்பவமாய் பொதுச் சுகாதார கண்காணிப்பு அதிகாரி கம்பால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
டெங்கிக் காய்ச்சல் பரவக் காரணமான கொசுக்கள் பெருகுவதற்கு இடமளிக்கும் தேங்கிய நீர், குப்பை போன்ற விஷயங்கள் வீடுகளில் காணப்படுகிறதா என்று பரிசோதிக்க வந்த கண்காணிப்பாளருடன் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஒருவர் அவரை அடித்துக் கொன்றுள்ளார்.
இலங்கையின் கிழக்கே நடந்த இந்த சம்பவத்தில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றாலும், சுகாதாரத்துறைக் கண்காணிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களாய் இருக்கும் சுமார் ஆயிரத்து எழுநூறு பேர் செவ்வாயன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்த சம்பவம் அல்லாது சுகாதாரத்துறை கண்காணிப்பாளர்களுக்கு எதிரான வேறு தாக்குதல்களும் நடந்திருப்பதாகவும், ஆபத்துக்கு இடையில் தாங்கள் வேலை பார்ப்பதாக சுகாதாரத்துறை கண்காணிப்பாளர்கள் உணர்வதாகவும் அவர்களுக்கான சங்கத்தின் செயலர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இனி சுகாதாரத்துறை கண்காணிப்பாளர்கள் தனி ஆளாகச் செல்லாமல் குழுவாகவே கண்காணிப்பு செய்வர் என்று அவர் குறிப்பிட்டார்.
கண்காணிப்பாளர்களுக்கு எதிரான தாக்குதல்களை செய்தவர்களில் சிலருக்கு அரசியல்வாதிகளின் ஆதரவு இருக்கிறது என்பதால், அவர்கள் சட்டப்படி தண்டனை பெறும் வாய்ப்பு இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
வேகமாகப் பரவும் டெங்கி
கொசுக்கள் மூலம் பரவும் டெங்கிக் காய்ச்சல் எலும்புகளில் கடுமையான வலியை ஏற்படுத்தும் ஒரு நோய் ஆகும். இதற்கு தடுப்பு மருந்தும் கிடையாது.
ஒரு ஆண்டில் மிக அதிகமாக இந்த நோய் பரவுக்கூடிய காலப்பகுதி இது என்பதால், இலங்கையில் டெங்கிக் காய்ச்சல் வந்தவர்களின் எண்ணிக்கை தற்போது மிக அதிகமாகவுள்ளது.
இலங்கையில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டுமாகவே ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கி காய்ச்சல் வந்துள்ளது. இவர்களில் குறைந்தது 76 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையைப் பொறுத்த அளவில் டெங்கி ஒரு பெரிய சுகாதாரப் பிரச்சினை என்று உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கை அலுவலகத்தைச் சேர்ந்த ஃபிர்தோஸி மெஹ்தா தெரிவித்துள்ளார்.





























