இலங்கை தேசிய அணிகளில் முன்னாள் விடுதலைப் புலிகள்

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் இலங்கையின் தேசிய விளையாட்டு அணியில் இணைத்துக் கொள்ளப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
புனர்வாழ்வு பயிற்சி பெற்றுவந்தவர்களில் திறமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளித்து, நாட்டின் சார்பில் போட்டிகளில் பங்கு கொள்ள வைப்பதே இதன் நோக்கம் என்று விளையாட்டு அமைச்சகம் கூறுகிறது.
தற்போது நீச்சல், துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை, கிரிக்கெட், கால்பந்து போன்ற போட்டிகளில் மேலதிகப் பயிற்சிகளைப் பெற அவர்கள் தேர்வாகியுள்ளதாக அந்த அமைச்சகத்தின் ஊடகச் செயலர் ஹர்ஷ அபேகோன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இராணுவ வீரர்களை எதிர்த்து போரிட்ட அவர்கள், இப்போது இராணுவத்தினருடன் இணைந்து பயிற்சி பெற்று நாட்டின் விளையாட்டு அணிகளில் இடம்பெறும் வாய்ப்பை இது தந்துள்ளது இணக்கப்பாட்டுக்கான ஒரு வழி என்றும் அவர் கூறுகிறார்.
இதன் மூலம் யாராக இருந்தாலும், திறமை இருந்தால் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்கிற செய்தியை உலகுக்கு காட்டவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அபேகோன் கூறுகிறார்.
இவ்வகையில் சில மாற்றுத் திரனாளிகளும் இனங்காணப்பட்டு, கூடுதல் பயிற்சிகளுக்காக தேர்வாகியுள்ளனர்
தேர்தெடுக்கப்பட்டுள்ள இந்த முன்னாள் புலி உறுப்பினர்கள் தற்போது தேசிய சங்கங்களின் கீழ் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார்கள் என்றும், 2013 ஆம் ஆண்டு புதுடில்லியில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர்கள் பங்குபெறும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
.
.





























