'தேர்தலுக்கு முன்னர் எங்களை குடியேற்றுங்கள்': சம்பூர் மக்கள்

இலங்கையின் கிழக்கே சம்பூர் பகுதியிலிருந்து 7 ஆண்டுகளுக்கு முன்னர் மோதல்களின்போது இடம்பெயர்ந்த மக்கள் தம்மை எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமக்கு கிடைத்துவந்த உணவு உதவிகளையும் அரசு கடந்த 8 மாதங்களாக நிறுத்திவிட்டதாகவும் அதனால் மிகுந்த சிரமப்படுவதாகவும் அந்த மக்கள் கூறுகின்றனர்.
இந்திய அரசினால் சம்பூரில் முன்னெடுக்கப்படும் அனல்மின் நிலைய நிர்மாணம் காரணமாக தம்மை சொந்த இடங்களில் குடியமர்த்தாமால் அரசு கைவிட்டுள்ளதாக சம்பூர் மக்கள் நீண்டகாலமாக சுட்டிக்காட்டி வருகின்றனர்.
பல்வேறு இடங்களிலும் மாறிமாறி இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த தம்மை எந்தவிதமான வசதிகளும் வளங்களும் இல்லாத பிரதேசங்களில் குடியமர்த்த அரசாங்கம் நிர்ப்பந்தித்துவருவதாக இடைத்தங்கல் முகாமில் தங்கியிருக்கும் மூதூர் பிரதேசசபை உறுப்பினர் ராமலிங்கம் நாகேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.
அரசு காட்டுகின்ற இடங்களில் குடியமர மறுக்கும் தம்மை அச்சுறுத்தும் விதமாகவே உலக உணவுத் திட்டத்தின் உணவு நிவாரணங்களை அரச அதிகாரிகள் நிறுத்திவிட்டதாகவும் இதனால் கடந்த 8 மாதங்களாக உணவு, குடிநீர் மற்றும் குடியிருப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தாம் துயரங்களை அனுபவித்து வருவதாகவும் நாகேஸ்வரன் கூறினார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொழும்பிலிருந்து வரும் பிரபல அமைச்சர்களும் மாகாணத்தில் ஆளும் அரசியல் தலைவர்களும் தேர்தலுக்கு முன்னதாக தம்மை சொந்தக் கிராமங்களில் குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பூரில் சுமார் 800 ஏக்கருக்கும் அதிகமான காணிப்பகுதியை அரசவேலைகளுக்காக எடுத்துக்கொள்வதாக அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தமது வாழ்விடங்களும் பறிபோவதாக தாம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும் மூதூர் பிரதேசசபை உறுப்பினர் நாகேஸ்வரன் தெரிவித்தார்.




























