மன்னார் சம்பவம்: சட்டத்தரணிகள் போராட்டம் தொடர்கிறது

வட-இலங்கை சட்டத்தரணிகள் போராட்டம்
படக்குறிப்பு, வட-இலங்கை சட்டத்தரணிகள் போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது

இலங்கையின் வடக்கே, மன்னார் நீதவானை அச்சுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்ற அமைச்சர் ரிசாட் பதியுதீனை கைது செய்யவேண்டும் எனக்கோரி தலைநகர் கொழும்பிலும் வட- இலங்கையிலும் சட்டத்தரணிகள் இன்று திங்கட்கிழமையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் முன்பாகக் கூடிய சட்டதரணிகள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை முதலில் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.சி.வெலியமுன, அமைச்சருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரினார்.

நாட்டில் சகல அரச நிறுவனங்கள் அனைத்தும் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்த

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சட்டத்தரணி குணரட்ண வன்னிநாயக்க சுட்டிக்காட்டினார்.

வட-இலங்கைச் சட்டத்தரணிகளின் போராட்டம்

அமைச்சர் ரிசாட்டை கைதுசெய்யுமாறு கோரிக்கை
படக்குறிப்பு, அமைச்சர் ரிசாட்டை கைதுசெய்யுமாறு கோரிக்கை

இதேவேளை, வடஇலங்கை சட்டத்தரணிகளும் மன்னாரில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அமைச்சரைக் கைதுசெய்ய வேண்டும், நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தார்கள்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சட்டத்தரணிகள், தமது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவது என்றும் நிலைமைகளின் முன்னேற்றத்தையடுத்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்வது என்றும் தீர்மானித்திருக்கின்றார்கள்.

சர்ச்சைக்குரிய மன்னார் சம்பவத்தின்போது என்ன நடந்தது என்பது பற்றி மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் கயஸ் பெல்டானோ தலைமையில் நடைபெற்ற செய்தியளார்கள் சந்திப்பில் சட்டத்தரணிகள் விளக்கமளித்திருக்கின்றார்கள்.

முப்பதுக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் கையொப்பமிட்ட அறிக்கையொன்றும் இந்த செய்தியாளர் சந்திப்பின்போது வெளியிடப்பட்டது.

நீதவானை அச்சுறுத்தியதாகத் தெரிவிக்கப்படும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி, அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு இலங்கை சட்டதரணிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வவுனியா சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் அன்ரன் புனிதநாயகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்து மன்னார் நீதவான் பொலிசாரிடம் செய்துள்ள முறைப்பாட்டையடுத்து விசேட விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.