சபரகமுவை பல்கலை. மாணவர்கள் மீது தடியடி; 28 பேர் காயம்

பொலிஸ் தடியடிப் பிரயோகத்தில் 28 மாணவர்கள் வரை காயம். 5 பேர் காயம் ( படம்- தடியடி பிரயோகத்துக்கு முன்னர்)
படக்குறிப்பு, பொலிஸ் தடியடிப் பிரயோகத்தில் 28 மாணவர்கள் வரை காயம். 5 பேர் கைது ( படம்- தடியடி பிரயோகத்துக்கு முன்னர்)
பிரசுரிக்கப்பட்டது

இலங்கையில் பலாங்கொடைப் பிரதேசத்தில் சபரகமுவை பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 1500 பேர் வரையில் இன்று சனிக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியின்போது காவல்துறையினர் நடத்திய கண்ணீர்ப்புகைப் பிரயோகத்திலும் தடியடியிலும் 28 மாணவர்கள் வரை காயமடைந்துள்ளனர்.

மாணவர்கள் 5 பேர் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் இதுவரை நடத்தப்பட்ட சுழல்முறை உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நிர்வாகத்திடமிருந்து பதில் கிடைக்காமையினாலேயே வீதிக்கு வந்து போராட்டம் நடத்த நேரிட்டதாக மாணவர்கள் கூறுகின்றனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் மாணவர்கள் ஐந்துபேருக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடையை நீக்கக்கோரியும், அவர்களை பரீட்சைக்கு அனுமதிக்குமாறு கோரியும் துணைவேந்தர் உள்ளிட்ட நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு பலன் கிடைக்வில்லை என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.

நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

இலங்கையில் பல்கலைக்கழக நிர்வாகங்களில் அரசியல் தலையீட்டை நிறுத்துமாறு தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன
படக்குறிப்பு, இலங்கையில் பல்கலைக்கழக நிர்வாகங்களில் அரசியல் தலையீட்டை நிறுத்துமாறு தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன

பல்கலைக்கழக நிர்வாகம் 'அரசியல்வாதிகளின் பிடியில்' இருப்பதாகவும் மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பல்கலைக்கழக மாணவர் சங்க செயற்பாடுகளில் ஈடுபட்டதான குற்றச்சாட்டிலேயே மாணவர்கள் 5 பேருக்கும் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பூகோள விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த மாணவர் டி.தினேஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.

மாணவர் சங்கத்திற்கும் பல்கலைக்கழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, பொலிஸ் தரப்பிலும் பல அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் சமனலவெவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.லோரண்ஸ் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

பதுளை-கொழும்பு ஏ4 நெடுஞ்சாலையை மறித்து மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அமைதியான முறையில் கலைக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையிலேயே குறைந்த-பட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி தடியடி நடத்தியதாக அவர் கூறினார்.

இதற்கிடையே, சபரகமுவை பல்கலைக்கழக நிர்வாகத்தின் கருத்துக்களை உடனடியாக பெறமுடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.