ஏ-9 பாதை அதிகாரபூவமாக திறக்கப்பட்டது

பிரசுரிக்கப்பட்டது

இலங்கையின் வடக்கையும் தெற்கையும் தரைவழியாக இணைக்கின்ற முக்கிய சாலையாகிய ஏ-9 நெடுஞ்சாலையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சனியன்று வைபவரீதியாகத் திறந்து வைத்திருக்கின்றார்.

வடமாகாணத்தின் தலைநகராகிய யாழ்ப்பாணத்தை மத்திய மாகாணத்தின் தலைநகராகிய கண்டி மாநகருடன் இணைக்கின்ற இந்த நெடுஞ்சாலையில், அநுராதபுரம் மாவட்டம் கல்குளம் சந்தியில் இருந்து வடக்கு நோக்கி யாழ் நகர் வரையிலான பகுதி 2000 கோடி ரூபா செலவில் நவீன முறையில் புனரமைக்கப்பட்டிருக்கின்றது. யுத்தம் நடைபெற்ற காலத்தில் மரணங்கள் மலிந்த சாலை (ஹைவே ஒப் டெத்) என்று இந்த வீதி பெயர் பெற்றிருந்தது. இந்த வீதியின் புனரமைப்புக்கு சீன அரசு நிதியுதவி வழங்கியிருக்கின்றது. இந்த வீதியைத் திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 30 வருட காலம் யுத்தச் சூழல் காரணமாக சேதமடைந்திருந்த கிளிநொச்சி பிரதேசம் பல வழிகளிலும் யுத்தம் முடிந்த பின்னர் கடந்த 4 வருடங்களில் அபிவிருத்தி கண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். கிளிநொச்சி மாவட்டம் இரணைமடுவில் காலை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்ட விமானப்படையினருக்கான உள்ளக விமான ஓடு பாதை, யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இது தற்போது விமானப்படையினரால், ஒன்றரை கிலோ மீட்டர் நீளமும் 250 மீட்டர் அகலமும் கொண்ட, வசதிகள் பல கொண்ட ஓடுபாதையாக நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.