இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு ஆஸி செனட் ஆதரவு

லீ ரியானென் அம்மையார்
படக்குறிப்பு, லீ ரியானென் அம்மையார்
பிரசுரிக்கப்பட்டது

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை ஆஸ்திரேலியா ஆதரிக்க வேண்டும் என்று அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

இலங்கையின் இறுதிகட்ட போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து, ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என, ஐ நா வின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள ஒரு தீர்மானத்தை ஆஸ்திரேலிய அரசு ஆதரிக்க வேண்டும் என்று கோரும் தீர்மானம் ஒன்று இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதை அந்த செனட்டில் உறுப்பினராக இருக்கும் பசுமைச் கட்சியைச் சேர்ந்த லீ ரியானென் அம்மையார், பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்.

எனினும் இந்தத் தீர்மானம் ஆஸ்திரேலியாவை ஆளும் கூட்டணி அரசை கட்டுப்படுத்தாது எனவும் அவர் கூறினார்.

ஆனாலும், ஆளும் கூட்டணியில் இருக்கும் லிபரல் கட்சியின் உறுப்பினர் ஒருவர் செனட் சபையில் இந்தத் தீர்மானத்தை ஆதரித்துள்ளது, இதற்கு வலுசேர்த்துள்ளது என்று லீ ரியனென் கூறுகிறார்.

இந்தத் தீர்மானம் முன்னெடுக்கப்படுவதில் ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சாரங்களும் அழுத்தங்களும் இருந்தன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சீனா ஆதரவு

சீன துணை அதிபர் லீ யுவான்ச்சாவுடன் இலங்கை வெளியுறவு அமைச்சர்
படக்குறிப்பு, சீன துணை அதிபர் லீ யுவான்ச்சாவுடன் இலங்கை வெளியுறவு அமைச்சர்

இதேவேளை இலங்கைக்கான ஆதரவை சீனா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரீஸ் சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி யை சந்தித்து பேசியுள்ளார்.

இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரம் காக்கப்பட வேண்டும் என்பதில் சீனா தனது முழு ஆதரவைத் தெரிவிக்கும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

தமது உள்நாட்டு விவகாரங்களை திறம்பட நிர்வககிக்கும் அறிவும் ஆற்றலும் இலங்கையின் மக்களிடம் உள்ளது என்று தாங்கள் நம்புவதாகவும் சீனா கூறுகிறது.

மனித உரிமைகள் என்கிற போர்வையில் சில நாடுகள் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை தாங்கள் எதிர்ப்பதாகவும் சீனாவின் அரச செய்திக் குறிப்பு கூறுகிறது.

மனித உரிமைகள் விஷயத்தில் இரட்டை நிலைப்பாட்டை சில நாடுகள் எடுப்பதை சீனா எதிர்க்கிறது என்றும், அப்பிரச்சினை மரியாதை மற்றும் சமத்துவம் என்கிற அடிப்படையில் பேசித் தீர்க்கப்பட வேண்டும் என்பதே தங்களது ஆழமான கருத்து என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.