ஆஸ்திரேலியா சென்ற அகதிகள் படகு கடலில் தத்தளிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு அகதித்தஞ்சம் கோரி சென்றவர்களின் டபடகு (அவணப்படம்)
படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவுக்கு அகதித்தஞ்சம் கோரி சென்றவர்களின் டபடகு (அவணப்படம்)
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் புதுச்சேரியில் இருந்து கிளம்பியதாக கூறும் இலங்கை அகதிகள் படகு ஒன்று ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுக்கு அருகே தத்தளிப்பதாக ஆஸ்திரேலிய தமிழர் காங்கிரஸின் அகதிகள் தொடர்பான பொறுப்பாளர் பால விக்னேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தாம் நான்குமணி நேரத்துக்கு முன்னர் அந்த படகில் இருக்கும் ஒருவரிடம் தொலைபேசி வாயிலாக பேசியபோது அவர்களின் படகில் இருந்து எண்ணெய் கசிந்தபடி இருந்ததாகவும், அந்த படகில் 32 பெண்கள், 37 குழந்தைகள் உள்ளிட்ட மொத்தம் 152 பேர் இருப்பதாக தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் பால விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமது படகின் நிலை மோசமாக இருப்பதாகவும், படகில் இருந்த உணவுப்பொருட்கள் தீர்ந்துவிட்டதாகவும், அங்கு நிலவும் மோசமான பருவநிலை காரணமாக தமது நிலைமை மேலும் மேலும் மோசமாகிவருவதாகவும் தமக்கு உடனடியாக ஆஸ்திரேலிய அரசு உதவவேண்டும் என்று அவர்கள் கோரியதாகவும் பால விக்னேஸ்வரன் கூறினார்.

தாம் அவர்களிடம் பேசியபோது அந்த குறிப்பிட்ட படகு கிறிஸ்துமஸ் தீவில் இருந்து சுமார் 170 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக அவர்கள் தம்மிடம் தெரிவித்ததாகவும் பாலவிக்னேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

அதேசமயம் இந்த அகதிகள் படகு குறித்தோ அது எங்கே நிலைகொண்டிருக்கிறது என்பது குறித்தோ, இந்த படகையும் அதில் வந்திருக்கும் அகதிகளையும் ஆஸ்திரேலிய அரசு எப்படி கையாளப்போகிறது என்பது குறித்தோ, இதில் அடுத்து என்ன செய்யவிருக்கிறது என்பது குறித்தோ ஆஸ்திரேலிய அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமான கருத்துக்கள் எதையும் தெரிவிக்க ஆஸ்திரேலிய அமைச்சர்களும் அதிகாரிகளும் மறுத்துவிட்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.