காணாமல் போனவர்கள் குறித்து இலங்கையில் கவனயீர்ப்பு நடவடிக்கைகள்

பிரசுரிக்கப்பட்டது

இலங்கையில் உள்நாட்டு யுத்த காலத்தில் காணாமல் போனவர்களை கண்டு பிடித்து தருமாறு புதிய அரசாங்கத்திடம் வலியுறுத்தி இன்று வடக்கு -கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

திருகோணமலையில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம்
படக்குறிப்பு, திருகோணமலையில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கில் வவுனியாவிலும் கிழக்கே மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு போராட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டார்கள்.

30 வருட யுத்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டும் கைது செய்யப்பட்டும் விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்டும் காணாமல் போயுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்களும் மக்கள் பிரதிநிதிகளும் கூறுகின்றார்கள்.

பாதுகாப்பு தரப்பு மற்றும் தமிழ் ஆயுத அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினர் மீதே இது தொடர்பான குற்றச்சாட்டுக்களும் ஏற்கனவே முன் வைக்கப்பட்டாலும் அவர்களால் அது மறுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு மற்றும் நாங்கள் அமைப்பு ஆகியன இணைந்த ஏற்பாட்டில் கல்லடிப் பாலத்திற்கு அருகாமையிலிருந்து காந்தி சதுக்கம் வரை கவன ஈர்ப்பு பேரணி யொன்று நடைபெற்றது.

திருகோணமலை நகரில் மாவட்ட பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் உட்துறைமுக வீதியிலுள்ள சிறுவர் புங்காவிலும் வவுனியாவில் நகர சபை மைதானத்திலும் இந்த கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த கவனயீர்ப்பு பேரணியிலும் போராட்டத்திலும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் காணாமல் போனவர்களின் உருவப்படங்களையும் கைகளில் ஏந்தியவாறு கலந்து கொண்டார்கள்.

கடந்த காலங்களில் காணாமல் போயுள்ள தமது உறவுககள் கண்டு பிடித்து தரப்பட வேண்டும, சிறைச்சாலைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப் பட வேண்டும், பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை புதிய ஜனாதிபதி யிடமும் புதிய அரசாங்கத்திடமும் வலியுறுத்தும் வகையில் பல்வேறு வாசக அட்டைகளையும் பதாதைகளையும் ஏந்தி அவர்கள் காணப்பட்டார்கள்.