மாணவி கொலையை கண்டித்து மட்டக்களப்பிலும் ஹர்த்தால்
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில், ''புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு கண்டணம் தெரிவித்து'' இன்று வெள்ளிக்கிழமை கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இன்றைய ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு காரணமாக மாவட்டத்தில் வழமை நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய ஹர்த்தாலுக்கான அழைப்பு ''நாம் திராவிடர் தமிழர்களின் போர் வாள் " என குறிப்பிடப்பட்டிருந்த துண்டு பிரசுரமொன்றின் மூலம் விடுக்கப்பட்டிருந்தது.
''கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும், கொலையாளிகள் சார்பில் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது'' ஆகிய கோரிக்கைகளும் ஹர்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த அந்த பிரசுரத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகர் , வாழைச்சேனை , செங்கலடி , களுவாஞ்சிக்குடி உட்பட அநேகமான பிரதேசங்களில் மாணவர் வரவின்மையால் பாடசாலைகள் இயங்கவில்லை.
கடைகள் , தனியார் அலுவலகங்கள் , நிதி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அரச வங்கிகள் திறக்கப்படவில்லை. அரச அலுவலகங்களின் செயல்பாடுகளிலும் வழமை நிலை பாதிக்கப்பட்டிருந்தது.
செங்கலடி , வந்தாறுமூலை , கல்லடி உடபட பல இடங்களில் பேரணிகளும் ஆர்பாட்டங்களும் இடம்பெற்றிருந்தன.
வழமையான நாட்களைவிட பொலிஸ் பாதுகாப்பும் இன்று சற்று அதிகரிக்கப்பட்டிருந்ததை காணமுடிந்தது.
































