யாழ் மாநகர எல்லைக்குள் போராட்டம் நடத்த தடை

பிரசுரிக்கப்பட்டது

பொது இடங்களில் போராட்டம் நடத்துவதும், போராட்டம் நடத்துவதற்காகப் பலர் கூடி நிற்பதும், பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் என்ற காரணத்தினால் பொது இடங்களில் போராட்டம் நடத்துவதை யாழ் மாநகர எல்லைக்குள் நீதிமன்றம் தடை செய்திருக்கின்றது.

போராட்டங்களி்ன் போது யாழ் நீதிமன்றம் தாக்கப்பட்டது
படக்குறிப்பு, யாழ் நீதிமன்றம்

இருந்தும் நீதிமன்றத் தடையுத்தரவுக்கு மத்தியிலும் யாழ் நகரில், புங்குடுதீவு மாணவி வித்யாவின் கோரக்கொலைக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது.

இரு தினங்களுக்கு முன்னர் யாழ் நகரில் நடத்தப்பட்ட கடையடைப்பு பணிபுறக்கணிப்பு போராட்டங்களின்போது யாழ் நீதிமன்றம் தாக்குதலுக்கு உள்ளாகியதுடன் பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் எற்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து 130 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இந்தப் பின்னணியிலேயே யாழ் நீதிமன்றம் போராட்டங்களைத் தடை செய்திருக்கின்றது. இந்த நிலையில் இன்று பெண்கள் சிந்தனை அமைப்பினர் யாழ் நகரில் தங்களுடைய அலுவலக வளாகத்தினுள் போராட்டம் நடத்தியிருக்கின்றார்கள்.

மாணவி வித்யாவின் மரணம் தொடர்பான விசாரணைகளைப் பொறுப்பேற்றுள்ள புலனாய்வு காவல்துறையினர் புங்குடுதீவு பகுதிக்குச் சென்று மாணவி வித்யாவின் குடும்பத்தினரிடமும் ஏனையோரிடமும் விசாரணைகளை நடத்தியிருக்கின்றனர். அத்துடன் சம்பவம் நடைபெற்ற இடத்தையும் பார்வையிட்டு சோதனைகள் நடத்தியிருக்கின்றனர். மாணவி வித்யாவின் கொலைச் சம்பவத்தைக் கண்டித்து வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.