இருபதாவது திருத்தத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல்
இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வரும் வகையில் அரசியல் யாப்பின் 20வது திருத்தத்திற்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

பட மூலாதாரம், defence.lk
அமைச்சரவையின் விஷேட கூட்டம் இன்று ஜனாதிபதியினால் கூட்டப்பட்டது.
தேர்தல் தொகுதிவாரியாகவும் மற்றும் விகிதாசார அடிப்படையிலும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான அம்சங்களை உள்ளடக்கிய புதிய திருத்தத்தில், தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225இலிருந்து 237 அதிகரிக்கப்படுகின்றது.
தேர்தல் தொகுதி வாரியாக 145 பேரும் மாவட்ட மட்ட விகிதாசார அடிப்படையில் 55 பேரும் தேசியப் பட்டியலின் மூலம் 37 பேரும் உறுப்பினர்களாக தெரிவு செய்யும் வகையில் இந்த திருத்தம் அமைவதாக அமைச்சரொருவர் கூறினார்.
கடந்த அமைச்சரவயில் எதிர்ப்புகளை வெளியிட்ட சிறுபான்மை இன கட்சிகளின் அமைச்சர்களால் இதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்படடதாக கூறப்படுகின்றது.
புதிய நாடாளுமன்ற தேர்தல் முறை தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று நள்ளிரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் தொகுதி வாரி பிரதிநிதித்துவம் இல்லை.
விகிதாசார அடிப்படையில், மாவட்ட ரீதியாக 196 பேரும் தேசியப் பட்டியல் மூலம் 29 பேரும் அங்கத்துவம் பெற்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
































