நாடாளுமன்றத் தேர்தல்:வட இலங்கை விண்ணப்ப நிலவரம்

பிரசுரிக்கப்பட்டது

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைந்துள்ளன.

வடக்கே யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களில் 400க்கும் அதிகமானவர்கள் போட்டியிடுகிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்குதல் முடிவுக்கு வந்தது.
படக்குறிப்பு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்குதல் முடிவுக்கு வந்தது.

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகள் தவிர பிராந்திய ரீதியில் ஆதரவு கொண்ட கட்சிகளும் வேட்பாளர்களை இறக்கியுள்ளன.

யாழ் நிலைமை

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 17 அரசியல் கட்சிகளும், 12 சுயேச்சை குழுக்களும் என மொத்தமாக 29 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள்
படக்குறிப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள்

இவற்றில் 2 அரசியல் கட்சிகளினதும் 6 சுயேச்சை குழுக்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

யாழ் மாவட்டத்தில் சுயேச்சை குழுவாகக் களமிறங்கியுள்ள முன்னாள் போராளிகளின் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைமை வேட்பாளராக ஊடகவியலாளர் வித்தியாதரன் போட்டியிடுகின்றார்.

அனந்தி போட்டியில்லை

இதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், இத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என அறிவித்து, தேர்தலில் இருந்து ஒதுங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் இத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக சில நாட்களுக்கு முன்னர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருந்தார்.

வன்னி நிலைமை

வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கென 19 அரசியல் கட்சிகளும், 11 சுயேச்சை குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.

இவற்றில் நவ சிஹல உறுமய என்ற அரசியல் கட்யினதும் ஒரு ,சுயேச்சை குழுவினதும் வேட்பு மனுக்கள் தேர்தல் அதிகாரிகளினால் நிரகாரிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைச்சர் ரிஷாத் போட்டி
படக்குறிப்பு, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைச்சர் ரிஷாத் போட்டி

வன்னி தேர்தல் மாவட்டத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஐக்கிய தேசிய கட்சியிடன் இணைந்து அதன் தலைமை வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

அவருடன் இணைந்து கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த ஹுனைஸ் ஃபாருக் இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பிரதம வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டமைப்பு சார்பில் சிவநாதன் கிஷோர் போட்டி
படக்குறிப்பு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டமைப்பு சார்பில் சிவநாதன் கிஷோர் போட்டி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய சிவநாதன் கிஷோர் கூட்டமைப்பில் சந்தர்ப்பம் வழங்கப்படாததையடுத்து, தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து தலைமை வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார்.

மலையக மக்களின் பிரதிநிதிகளும் களத்தில் உள்ளனர்
படக்குறிப்பு, மலையக மக்களின் பிரதிநிதிகளும் களத்தில் உள்ளனர்

மலையக மக்கள் சார்ந்த பிரதிநிதிகள் பிரஜைகள் முன்னணியில் இணைந்து இம்முறை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை கடந்த வெள்ளிகிழமை மனுத் தாக்கல் செய்திருந்தனர்.