இலங்கை: மனுவை வாபஸ் பெற்றார் நீதிபதி ஆப்ரு

பிரசுரிக்கப்பட்டது

தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் காவல்துறை விசாரணைகளை தடைசெய்ய வேண்டுமெனக் கோரி உச்ச நீதிமன்ற நீதிபதி சரத் டி ஆப்ரு தாக்கல்செய்த அடிப்படை உரிமை மீறல் மனு செவ்வாய்க்கிழமையன்று வாபஸ் பெறப்பட்டது.

நீதிபதி ஆப்ரு தன் மனுவை வாபஸ் பெற, இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியிருக்கிறது.
படக்குறிப்பு, நீதிபதி ஆப்ரு தன் மனுவை வாபஸ் பெற, இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியிருக்கிறது.

தனது வீட்டுப் பணிப்பெண்ணை தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட நீதிபதி ஆப்ரு அண்மையில் கல்கிசை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலைசெய்யப்பட்டார்.

நீதிபதி ஆப்ரு தாக்கல்செய்த அடிப்படை உரிமை மீறல் மனு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, கருத்துக்களை தெரிவித்த சட்ட மா அதிபர், ஆப்ருவிற்கு பிணை வழங்கும் விவகாரத்தில் கல்கிசை மாஜிஸ்ட்ரேட் பக்கச் சார்பான முறையில் செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

ஆகவே, இது தொடர்பாக விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் நீதிபதி ஆப்ருவின் வழக்குடன் தொடர்புடைய சகல ஆவணங்களையும் அளிக்க வேண்டுமென நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், காவல்துறை விசாரணைகளைத் தடைசெய்யக் கோரும் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆப்ரு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களுடைய மனுவை வாபஸ் பெறுவதற்கு அனுமதிதருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

நீதிபதி ஆப்ரு தற்போது பிணையின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ள காரணத்தால், இந்த மனுவை மேற்கொண்டு விசாரணை செயவதற்கு அவசியமில்லை என்றும் ஆப்ருவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் குழு, மனுவை வாபஸ் பெறுவதற்கு அனுமதி வழங்கியது.