இலங்கையில் வறண்ட காலநிலை; பல மாவட்டங்களில் குடிநீர்ப் பிரச்சனை

இலங்கையில் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக வடக்கு - கிழக்கு உட்பட நாட்டின் சில மாவட்டங்களில் சுமார் 60 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை நிலையம் கூறுகின்றது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் வறண்ட காலநிலையால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக அந்த நிலையத்தில் துணை இயக்குநரான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவுகள் மற்றும் நிவாரண சேவைப் பிரிவுகள் என்பன பேரிடர் மேலாண்மை அமைச்சுடன் இணைந்து நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன.
கிழக்கு மாகாணத்திலேயே கூடுதலான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 15 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை உதவி இயக்குநரான எஸ். இன்பராஜன் தெரிவிக்கின்றார்.
வறட்சியினால் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களில் உள்ள மக்கள் பெரும் குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளனர்.
உள்ளுராட்சி சபைகள் மூலம் பவுசர்களில் குடிநீர் வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தாலும், அது போதுமானதாக இல்லை என்றும் சீரான விநியோகம் இல்லை என்றும் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.
கால்நடைகளும் மேய்ச்சல் மற்றும் குடிநீர் பிரச்சனைகளை எதிர்கொள்வதால் நோய்வாய்ப்படுவதாக கால்நடை வளர்ப்போர் கவலையடைந்துள்ளனர்.
மேட்டு நில பயிர்கள் அநேகமான பிரதேசங்களில் நீர் இன்றி காய்ந்து கருகி விட்டதால் பயிர்ச்செய்கையாளர்கள் வாழ்வாதாரப் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர்.
அரசாங்கம் தங்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.





























