நுவரெலியாவில் மாணவிகளிடம் பாலியல் துஷ்பிரயோகம்: ஆசிரியர் கைது

பிரசுரிக்கப்பட்டது

இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச தோட்ட பாடசாலை மாணவிகளிடம் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர், தோட்டத் தொழிலாளர்கள்.
படக்குறிப்பு, பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர், தோட்டத் தொழிலாளர்கள்.

இந்த சம்பவத்திற்கு பாடசாலை நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டுமெனக் கோரி, அப்பள்ளிக்கூட மாணவர்களின் பெற்றோர்களும் தோட்ட மக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலை மாணவிகளின் பாதுகாப்பில் பாடசாலை நிர்வாகம் கவனம் செலுத்த தவறியிருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்தச் சம்பவத்தையடுத்து, அப்பாடசாலையின் அதிபர் உட்பட அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரினர்.

தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கும் 31 வயதான அந்த ஆசிரியர், பிரத்யேக வகுப்பு என்ற போர்வையில் 10ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மாணவிகள் பாதிக்கப்பட்டதற்கு சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடமே பொறுப்புக்கூற வேண்டுமென பெற்றோர் கூறியுள்ளனர்.
படக்குறிப்பு, மாணவிகள் பாதிக்கப்பட்டதற்கு சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடமே பொறுப்புக்கூற வேண்டுமென பெற்றோர் கூறியுள்ளனர்.

தமது குழந்தைகளை அந்த ஆசிரியர் பல தடவை பாலியல் துஷ்பியோகம் செய்ய முயன்றதாக நான்கு மாணவிகளின் பெற்றோர்கள் ஹட்டன் காவல்துறையிடம் புகார் செய்ததையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

சம்பந்தப்பட்ட மாணவிகள் நான்கு பேரும் தற்போது நாவலப்பிட்டி அரசாங்க மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.