போதைப் பொருள் வர்த்தகரிடம் பணம் பெற்ற சிறை ஊழியர்கள்
தற்போது சிறையில் உள்ள இலங்கையின் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான வெலே சுதாவிடமிருந்து லஞ்சம் வாங்கிய சிறைச்சாலை ஊழியர்கள் 17 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், AjithLal ShanthaUdaya
ஈஸி கேஸ் என்ற பணப் பரிமாற்ற முறை மூலம் வெலே சுதாவிடமிருந்து இவர்கள் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கண்டுப்பிடித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன புஷ்பகுமார பிபிசியிடம் தெரிவித்தார்.
சிறைச்சாலை ஊழியர்கள் 45 பேர் வெலே சுதாவிடமிருந்து பணம் பெற்றுள்ளனர் என்ற தகவல் ஊடகங்களில் வெளியானதையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ஈஸி கேஸ் என்ற முறையின் மூலம் பணம் பெற்றுக்கொண்ட 17 சிறைச்சாலை ஊழியர்களின் பெயர்கள் தமக்குத் தெரியவந்ததாக ரோஹன புஷ்பகுமார கூறினார்.
இலங்கையில் 31 சிறைச் சாலைகள் இருக்கின்றபோதிலும், கொழும்பில் உள்ள சிறைச்சாலைகளிலேயே இவ்வாறான சம்பவங்கள் நடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள சிறைகளில் தண்டனை அனுபவித்துவரும் கைதிகளில் பெரும்பாலானவர்கள், போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்தவர்களாகவும், நிழல் உலகத் தலைவர்களாகவும் இருப்பதால் அவர்களிடம் உள்ள கறுப்புப் பணத்தை வைத்து ஊழியர்களை தன் வசப்படுத்துவதாகவும் ரோஹன புஷ்பகுமார கூறினார்.




























