ஐ நா குழுவினரை மட்டக்களப்பில் தமிழ்-முஸ்லிம் மக்கள் சந்தித்தனர்
இலங்கையில் வலிந்து காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை நடத்தி வரும் ஐ நா உயர்மட்டக் குழுவினர் மட்டக்களப்பில் தமது அமர்வை சனிக்கிழமை நடத்தினர்.

இந்த அமர்வில் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டு தமது முறைப்பாடுகளையும் கருத்துக்களையும் தெரிவித்தனர்.
காணாமல் போனவர்களின் உறவினர்கள், தமது உறவுகளை கண்டுபிடித்துத்தர ஐ நா குழுவினர் உதவ வேண்டும் எனக் கோரினர்.
எனினும் காணாமல் போனோரை கண்டுபிடித்துத்தர தம்மால் உறுதியளிக்க முடியாது என்றாலும், அவர்களுக்கு நீதியும், நியாயமும் கிடைக்க தம்மாலான முயற்சிகளை செய்வதாக கூறினர் என ஐ நா அதிகாரிகள் கூறியதாக அவர்களை சந்தித்தவர்கள் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர்.
ஐ நா மீது தமக்குள்ள நம்பிக்கை காரணமாகவே இந்தக் குழுவினரை சந்தித்து முறைப்பாடுகளையும், ஆவணங்களையும் சமர்பித்துள்ளதாக காணாமல் போனோரின் உறவினர்கள் கூறுகின்றனர்.
தமிழர்களைப் போலவே முஸ்லிம்களும் இந்த அமர்வில் கலந்துகொண்டர் என அங்குள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.

























