போலி உரிமம் மூலம் யானை குட்டி வைத்திருந்த இலங்கை நீதிபதிக்கு சிக்கல் தொடர்கிறது

பிரசுரிக்கப்பட்டது

போலியான அனுமதி பத்திரமொன்றை பயன்படுத்தி யானை குட்டியொன்றை தன்வசம் வைத்திருந்ததாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக குற்ற புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலமொன்றைத் தருமாறு கொழும்பு மேலதிக நீதிபதி திலின கமகேவிற்கு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்பு படம்
படக்குறிப்பு, கோப்பு படம்

இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக மேலதிக நீதிபதி திலின கமகே ஒரு சந்தேக நபராக நியமிக்கப்பட்டுள்ளதாக குற்ற புலனாய்வு திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் அறிவித்தது.

வாக்கு மூலங்களை பெற்றுக் கொள்வதற்கு ஆஜராகுமாறு நீதிபதி கமகேவிட்கு இரண்டு முறை அறிவித்த போதிலும் அவர் குற்ற புலனாய்வு திணைகளத்தில் ஆஜராக தவறியுள்ளதாக போலீசார் அறிவித்தனர்.

எனவே, குற்ற புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலமொன்றை பெற்றுக்கொடுக்கும்படி நீதிபதி கமகேவிற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.

அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட கொழும்பு பிரதான மாஜஸ்டிரெட் நீதிபதி கிஹான் பிளபிட்டிய வரும் 25-ஆம் தேதியன்று கொழும்பு குற்ற புலனாய்வு திணைகளத்தில் ஆஜராகி வாக்கு மூலமொன்றை தருமாறு சந்தேக நபரான மேலதிக நீதிபதி திலின கமகேவிட்கு உத்தரவு பிறப்பித்தார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக போலீசார் தன்னை கைது செய்வதை தடை செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மேலதிக நீதிபதி திலின கமகே தாக்கல் செய்த மனுவொன்றை உச்சநீதிமன்றம் அண்மையில் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.